‘ரிப்பப்பரி’ விமர்சனம்

மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவியா அறிவுமணி, நோபல் கே ஜேம்ஸ், மாரி மற்றும் பலர் நடித்துள்ளனர். நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ளார்.

சமத்துவம் பேசும் சமூக கருத்துக்கள், காமெடிகள், பேய், திகில் என்று கலந்து கட்டி நகைச்சுவையாகக் கூறி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ள படம்.

கலப்புத் திருமணம் செய்பவர்களைத் தேடி கொலை செய்யும் ஒரு பேயை அது சம்பந்தப்பட்ட ஆட்களை பின்னணியைத் தேடுகிறார்கள் மாஸ்டர் மகேந்திரன் அண்ட் நண்பர்கள் கோ.அப்படி மூன்று கொலைகள் நடந்திருக்கும் நிலையில் தேடுகிறார்கள்.ஒரு குரங்கு பொம்மை ,அதற்குள் இறந்து போன போலீஸ்மோப்ப நாயின் ஆவி உள்ளது. அது மோப்ப நாய் போல் பேய் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கும் என்கிறார்கள். இந்தக் குரங்கு பொம்மை பேய் வரும் இடங்களில் மேளம் அடித்து எச்சரிக்கை செய்யும். அப்படி சிலரைப் பார்க்கும் போது எச்சரிக்கை செய்கிறது. அதை வைத்து சம்பந்தப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் நண்பர்கள். அவ்வப்போது கூடவே போலீசையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் தேடும் பேய் யார்? அந்தக் கொலைகாரர்களை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

இதேபோல் மாஸ்டர் மகேந்திரன் காதலியின் பின்னணியில் ஒரு கதை நகர்கிறது . இரண்டாம் பாதியில் அது விரிகிறது.

முதல் பாதி வரை நண்பர்களின் அசட்டுத்தனமான ஜோக்குகளும் நெளிய வைக்கும் நகைச்சுவையும் என்று அலுப்புடன் காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாவது பாதியில் அந்த முன் கதை காட்சிகளில் ஓரளவு அழுத்தம் காட்ட முயன்று இருக்கிறார்கள்.அதற்கேற்ற இசையும் பின்னணி இசையும் படத்தை ஓரளவு தெளிவுள்ளதாக மாற்றுகின்றன.
ஆண்கள் வயதுக்கு வரும் விழாவெல்லாம் சிரிக்க வைக்கும் சுவாரஸ்யமான கற்பனை தான்.

மாஸ்டர் மகேந்திரன் சின்ன வயதிலேயே நடிப்பில் உடன் நடிக்கும் அனைவரையும் தூக்கிச் சாப்பிடுபவர். அவருக்கு ஏற்ற நடிப்பு வாய்ப்புகள் இதில் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும் .அதன்படி கூட வந்த நண்பர்களும் அவருக்காகப் பக்க வாத்தியங்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.கதாநாயக அந்தஸ்தில் முகம் காட்டும் இரு நடிகைகளும் நல்ல முக வசீகரம் கொண்டவர்கள் தான். மேலும் காட்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம்.
கதை கூறும் பாணி ஏதோ ஒரு திசையில் சென்று இருந்தால் இந்தப் படம் சிரிக்க வைப்பதற்காவது முழு அளவில் வெற்றி பெற்றிருக்கும்.

லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்கள்.