‘லக்கி மேன்’ விமர்சனம்

யோகி பாபு, ரேச்சல் ரெபேக்கா, வீரா,அப்துல் , கௌதம் சுந்தர்ராஜன், ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே விஜயன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

உலகியல் வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களில் வெற்றி பெற்றுச் சிகரம் தொட்டவர்களை விட அன்றாடம் தோல்விகளைச் சுவாசித்து துரதிர்ஷ்ட சாலிகளாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் மனிதர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட ஒரு தோல்வியின் நாயகனை, அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்காத அபலையான முருகன் என்பவனின் கதையை எடுத்து இழை பிரித்து நெய்து ஒரு சுவாரஸ்யமான கலகலப்பான படமாகக் கொடுத்துள்ளார் எழுதி இயக்கியுள்ள பாலாஜி வேணுகோபால்.

கதை நாயகன் முருகனாக வரும் யோகி பாபு ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். அவரது மனைவி , பள்ளி வயது மகன் என்று வாழ்கிறார்.அன்றாட உலகியல் வாழ்க்கையில் தனது குடும்பத் தேவைகளுக்காகவே அல்லாடிக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரு சிட் பண்ட் கம்பெனி மூலம் அதிர்ஷ்டக் குலுக்கலில் கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது.தனக்கா அந்தப் பரிசு என்பதை நம்ப முடியாமல் காரைப் பெற்றுக் கொள்கிறார்.

காரை வைத்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்று நினைக்கிறார் பெரிய டீலிங்கில் ரியல் எஸ்டேட் கமிஷன் ஒன்று நெருங்கி வருகிறது. அந்த நேரத்தில் அவர் பாதையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி குறுக்கிடுகிறார்.யோகி பாபுவின் அப்பாவித் தனமான நடவடிக்கைகளால் சீண்டப்பட்டவர் இவர் மீது பகை உணர்ச்சி கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரது காரைப் பறிமுதல் செய்கிறார். எது அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்பட்டதோ அதே கார் துரதிர்ஷ்டத்தின் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. முடிவு என்ன என்பதுதான் லக்கி மேன் படத்தின் கதை.

எங்கு போனாலும் துரதிர்ஷ்டம் வந்து சேர்ந்து கொள்ளும் யோகிபாபுவின் வாழ்க்கை அன்றாட நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பது போல் இருப்பதால் படம் பார்ப்பவர்கள் தங்களை எளிதில் அவரது பாத்திரத்தில் பொருத்திக் கொள்ள முடியும்.தங்களது வறுமையை வாய்ப்பேச்சின் மூலம் சமன் செய்து கொள்ளும் துடுக்குத்தனமான பேச்சு பலருக்கும் உள்ளது இயற்கை. அப்படி ஒரு வாய்மொழி மூலம் தான் அவர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

இரண்டாவது பாதி அந்த நேர்மையான போலீஸ்இன்ஸ்பெக்டர், இவர் வாழ்க்கையில் குறுக்கிடுவதும் அதன் விளைவுகளும் என்று கதை க்ரைம் த்ரில்லர் போல விறுவிறுப்பாக மாறுகிறது.

படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆக வரும் யோகி பாபு தனது வழக்கமான கலகலப்பான பேச்சாலும் உடல் மொழியாலும் முதல் பாதியில் சிரிப்பு மூட்டுகிறார்.
ஒரு நடிகராக யோகி பாபு அந்த முருகன் பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

அவரது மனைவியாக நடித்த ரேச்சல் ரெபேகாவும் கனவுகளை மனதில் வைத்துத் தேக்கிக் புழுங்கிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்து மனைவியாக வாழ்ந்துள்ளார்.அவரது குணச்சித்திரம் குட் நைட் படத்தை நினைவூட்டினாலும் அது குறையாகத் தெரியவில்லை.

அப்பாவித்தனமான துடுக்குத் தனமான மழலையான பேச்சின் மூலம் சிறுவன் சாத்விக்கும் கவர்கிறான்.

சிவக்குமார் என்கிற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் நடித்துள்ள வீரா ,நல்லவரா கெட்டவரா என்று புரியாதபடி அவர் இயல்பு அதுதான் என்று உணரும்படியான அந்தப் பாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார்.நேர்மையாக கண்டிப்பாக இருப்பதும் எவ்வளவு சிக்கல் நிறைந்தது என்பதற்கு அவரது பாத்திரம் ஒரு சான்று.

யோகி பாபுவின் நண்பராக வருபவரும் சரியான தேர்வு.
அது மட்டுமல்ல இப்படத்தில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட மனதில் பதிகின்றன. அந்த அளவிற்கு பாத்திர வடிவமைப்புகள் குணச்சித்திரங்கள் சரியாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

தன்னம்பிக்கை பேச்சாளராக வரும் கௌதம் சுந்தர்ராஜன் ஒரு காட்சியில் வந்தாலும் பதிகிறார் .அது போலவே தவறு செய்யும் போலீஸ்காரர் செண்பகமூர்த்தியாக வரும் ஹலோ கந்தசாமி, சுதந்திரப் போராட்டத் தியாகியாக வரும் ராகுல் தாத்தா, சிட்பண்ட் கம்பெனியின் மேலாளராக வரும் பிரதீப் கே விஜயன்,
ரியல் எஸ்டேட் கம்பெனி நடத்தும் அமர்நாத் , வீராவின் எதிர்கால மனைவி
அபர்ணாவாக வரும் சுகாசினி குமரன், வீரா மீது பொறாமை கொண்ட போலீஸ் ஆபீஸர் ரமணன் ஆக வரும் ஜெயக்குமார்,புகழேந்தி ஆக வரும் விலங்கு ரவி, கமிஷனராக வரும் அஜித் கோஷி, ஹவுஸ் ஓனர் நாகார்ஜுனாவாக வரும் டெம்பிள் மங்கி தாவூத் என்று அனைவரும் தங்கள் கச்சிதமான நடிப்பின் மூலம் பதிகிறார்கள்.

இந்த உலகத்தில் சாமானியனின் சக்தி என்ன? அவனை எப்படி அதிகார வர்க்கம் எடுத்துக் கொள்கிறது? தனக்கான சுற்று வரும் போது மனித மனம் எப்படி பழிவாங்கத் துடிக்கிறது போன்றவை காட்சிகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன.உண்மையாக இருப்பது குறித்தும் உண்மை தவறி மனம் ஊசலாடும் தருணங்களையும் அது விளைவிக்கும் எதிர்விளைவுகளையும் இந்த படத்தில் போகிற போக்கில் சின்ன சின்ன காட்சிகளின் மூலம் அழகாகக் கூறியுள்ளார் இயக்குநர்.சபாஷ் பாலாஜி வேணுகோபால்!

யார் சூப்பர்  ஹீரோ,அதிர்ஷ்டம் எது துரதிர்ஷ்டம் எது என்பது குறித்த வசனங்களும் இயல்பாக உள்ளன.

ஒரு நகைச்சுவை கலந்த வணிக ரீதியான படத்தில் தத்துவார்த்தம் கொண்ட இயல்பான வசனங்களை ஆங்காங்கே இயக்குநர் தூவியுள்ளது சிறப்பு.

நேர்மை பற்றி பேசுவதற்கு உதாரணமாகச் சொல்லப்படும்,

“முதுகில் குத்தும் ப்ரூட்டஸை விட முகத்தில் குத்தும் முகமது அலிக்குத் தான் மரியாதை அதிகம்” என்கிற வசனம் ஒரு சாம்பிள். இது போல் பல உள்ளன.சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் இசையும் இயக்குநரின் இரு கரங்களாக அமைந்து வலுப்படுத்தி உள்ளன.

நட்சத்திர பலமின்றி நல்ல கதை சொல்லும் முறையாலும் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் ஒரு படம் வெற்றி பெறும் என்பதற்கு அண்மைக் காலமாக சில படங்கள் சாட்சிகளாக உள்ளன. அந்த வரிசையில் லக்கி மேன் படமும் சேர்வதற்கான அறிகுறிகள் உள்ளன.