‘வட்டார வழக்கு’ விமர்சனம்

‘டூ லெட்’ சந்தோஷ், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.
இயக்கியுள்ளார் .

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு டோனிஜான், சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சக்தி பிலிம்பேக்டரி படத்தை வெளியிடுகிறது.

இது எண்பதுகளில் குறிப்பாக 1985-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம்.முன் கதைக் காட்சிகளும் உண்டு.

படத்தைப் பற்றிய முன்னுரையாக பேராசிரியர் ஞானசம்பந்தன் குரலில் படத்தில் இடம்பெறும் குடும்பங்களின் பகையைப் பற்றி அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.

இரண்டு குடும்பங்களுக்குள் அவர்கள் சார்ந்த உறவினர்களுக்குள் நிலவும் பொறாமை, வன்மம், பழிவாங்கல் எந்த அளவிற்கு அந்த இரு குடும்பத்தையும் கொண்டு நிறுத்துகிறது, அவர்களின் உறவினர்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதையும் சொல்லும் கதை இது. இதற்கிடையே ஒரு காதல் கதையும் உண்டு.

எண்பதுகளில் மதுரைப் பகுதியில் நாகரிகங்கள் அறிவியல் முன்னேற்றம் எட்டிப் பார்க்காத கிராமத்தில் இந்தக் கதை நடக்கிறது.
மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்கின்ற குடும்பங்கள்  உழைத்து மெல்ல மெல்ல  மேலேறி வருகிறார்கள்.
அவர்களுக்குள் ஓரளவு வசதி படைத்தவர்கள் வசதி இல்லாதவர்களை இழிவாக நினைக்கிறார்கள்.எப்போது பார்த்தாலும் நீ இப்படி இருந்தவன் தானே உனக்கு என்ன மரியாதை என்று அவமரியாதை செய்கிறார்கள்.அவர்களுக்குள் நிலவுவது ஜாதி பேதமல்ல. கௌரவ பேதம், வசதி பேதம் தான். அவர்களுக்குள் மெல்ல நுழையும் பகைமை உணர்ச்சி விஸ்வரூபம் எடுத்து எந்த எல்லைக்குக் கொண்டு செல்கிறது என்பதைக் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு அடிதடி வெட்டு குத்து என்று செய்து கொண்டே இருக்கிறார்கள். வன்மத்தின் சதவீதம் கூடிக்கொண்டே இருக்கிறது.அங்கு உள்ளவர்களுக்கு அடிதடி ,போலீஸ் ஸ்டேஷன் என்பது எவ்வளவு சகஜம் என்பதற்கு அவர்கள் என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வார்கள் என்பதை வரிசையாக இ.பி.கோ பிரிவுகளைச் சொல்வதில் இருந்து உணர வைக்கிறார் இயக்குநர்.

படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது நடிப்புக் கலைஞர்கள் நடித்து திரைப்படம் போல் எடுத்தது போல் இல்லாமல் வாழ்க்கையில் நிஜமாக நடப்பதைக் கேண்டிட் கேமரா கொண்டு எடுத்தது போல் உள்ளது.இலக்கியத்திலும் சினிமாவிலும் உள்ளடக்கம் தான் முக்கியம், கூறுமுறை அடுத்த பட்சம் தான் .அதில் உள்ள தொழில்நேர்த்தி இரண்டாம் பட்சம் தான் என்பார்கள்.அதே நேரம் உள்ளடக்கம் தான் கூறு முறையைத் தேர்ந்தெடுக்கும் என்றும் சொல்வார்கள். அந்த வகையில் இதில் ஒரு திரைப்படத்திற்கான கிராஃப்ட் இரண்டாம் நிலையில் உள்ளது .அதனால் வீரியமான காட்சிகள் முதல் நிலைக்கு வந்து நிற்கின்றன.அதே நேரம் சினிமாவில் காட்சிகளுக்கான நேரம் கவனிக்கப்பட வேண்டும். சினிமா வடிவம் அனுமதிக்காத சில காட்சிகளும் இதில் உள்ளன.சில காட்சிகள் வரிசைத் தொடர்பற்று இடம் பெற்றுள்ளன.காட்சிகளின் விரைவிலும் கதை ஓட்டத்திலும் அதை நாம் கடந்து சென்று விடுவோம்.

படத்தில் நாயகனாக டூலெட் நாயகன் சந்தோஷ் நடித்துள்ளார். சேங்கை என்கிற பாத்திரத்தில் அவர் அந்த ஊரின் மைந்தனாகவே மாறி உள்ளார்.கடைசி வரை அடங்காத காளையாக வருகிறார். ரவீனா ரவி சற்று படித்து அறிவொளி இயக்கத்தில் முதியோர்களுக்கு  எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கும் துறுதுறுப்பான குமரியாக வருகிறார்.தோற்றத்தில் நடிப்பில் அந்த ஊர் பெண்ணாகவே மாறி இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த மண்ணின் மைந்தர்களே.யாரும் சொல்லிக் கொடுத்து நடித்தது போல் தெரியவில்லை.

கதைப்படி இந்தப் பகைமை மோதல் அடிதடி வெட்டு குத்து கொலை போன்றவை முடிவாக பேரழிவுக்குத் தான் இட்டுச் செல்லும். அது தான் நாம் பல்வேறு திரைப்படங்கள் பார்த்து யூகித்துக் கண்டது. ஆனால் நாம் எதிர்பார்க்காத திருப்பமாக வேறொரு கிளைமாக்ஸ் இந்தப் படத்தில் இருக்கும்.வட்டார வழக்கு என்கிற பெயர் ஏன் வைத்தார்கள்?ஒரு வட்டாரத்தில் அதாவது ஒரு பகுதியில் நடக்கும் வழக்கு, அதாவது குற்றவியல் வழக்கு சம்பந்தப்பட்ட கதையா? அல்லது வட்டார வழக்கிற்கு அந்தப் பிரதேச மக்களின் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள கதையா என்றால் இரண்டும் தான் என்று படத்தைப் பார்த்த பின் உணர முடியும்.

139.43நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தில் பேசப்படும் அந்த மண்ணின் , மக்களின் மொழி பழமொழிகள் சொலவடைகள் உயிர்ப்போடு உள்ளன.

அதுமட்டுமல்ல மண்மணம் மாறாத மாட்டு சந்தை, ரேக்ளா ரேஸ், சொக்கப்பனை கொளுத்துதல் என கிராமத்து நிகழ்ச்சிகளின் பதிவுகள் உள்ளன.  அந்த ஒவ்வொரு முக்கிய கூடுகையின் போதும் நடக்கும் மோதல்கள் அச்சு அசலான காட்சிகளாக உள்ளன.

படத்தில் தோன்றும் ஒவ்வொரு கதை மாந்தரும் நின்று நிதானமாக பேசுவதில்லை. ஒவ்வொரு பிரேமிலும் நிறையபேர் வருகிறார்கள் .அது மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் அசை கிறார்கள், நடக்கிறார்கள்,ஓடுகிறார்கள்,துரத்துகிறார்கள்,பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள், மோதிக் கொள்கிறார்கள்.அவர்களைத் துரத்தித் துரத்திப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர் குழுவின் உழைப்பு பாராட்டுக்குரியது.

சிறுவன் கொலை செய்யும் காட்சியைத் தவிர்த்து இருக்கலாம்.தற்கொலை செய்யும் இடங்களில் தற்கொலை ,பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று Disclaimer போடுகிறார்கள். அதீத வன்முறைக்கும் போடுவார்களா?

இளையராஜாவின் இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம்.’பிரேமை எனது ஊர்’ பாடல் தாளம் போட வைக்கும் மெலோடி.எண்பதுகளின் பாடல்களை ஆங்காங்கே ஒலிக்க விட்டு அந்தக் காட்சிகளை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறார்.இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கிறது.பலவீனமான காட்சிகளின் பள்ளத்தை நிரப்புகிறது.

சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியாக இந்தப் படம் உருவாகி உள்ளது. அந்த உழைப்புக்கு மரியாதை கொடுத்து தான் நட்சத்திர வரிசை படங்களை இதுவரை வெளியிட்டு வந்த சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது.
மொத்தத்தில் இந்த ‘வட்டார வழக்கு ‘சினிமா தீவிரத்தில் உருவான படைப்பு எனலாம்.