‘777 சார்லி’ விமர்சனம்

பிரபலமான கதாநாயகர்களை மட்டும் வைத்துதான் பேன் இந்தியா படம் உருவாக்க முடியுமா? பிரதானமான நாயகனாக நாயை வைத்துக் கூட அப்படி ஒரு படம் உருவாக்க முடியும் என்று வந்துள்ள படம் தான் ‘777 சார்லி’


செல்லப்பிராணிகளை ஏதாவது சின்ன சின்ன செயல்களைச் செய்ய வைத்தே பல படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றன. அதற்கு உதாரணமாக இயக்குநர் ராமநாராயணன் இயக்கிய படங்களைக் கூறலாம். ஆனால் செல்லப்பிராணிகளுக்கும் மனம் உள்ளது,அன்பு பாசம் உள்ளது என்று அவற்றின் உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிற படம் தான் 777 சார்லி.

உலகத்தோடு ஒட்டாமல் எந்தப் பற்றும் இல்லாமல் விரக்தி மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி. அவரது வாழ்க்கையில் ஒரு வானவில் போல் நுழைந்த ஒரு நாய்க்குட்டி , அவர் மனதில் மகிழ்ச்சி பூக்க வைக்கிறது. அதற்கு சார்லி என்று பெயர் வைக்கிறார்.இந்த உலகத்தில் தனக்காக வாழும் உயிர் என நினைத்து வாழ்கிறார்.ஒரு புதிய அத்தியாயமாக தன் வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அந்த நாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதையடுத்து வரும் நாயகன் ரக்‌ஷித் மற்றும் நாய்கன் சார்லியின் உணர்ச்சிகரப் பயணமே ‘777 சார்லி’.

சார்லி கதையில் வந்த பிறகு அதுவே படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.பல்வேறு முகபாவனைகளைக் காட்டி தேர்ந்த நடிகராக நிற்கிறது அந்த நாய்.குறும்பு செய்து குழந்தைகளை மகிழ்விக்கும் செல்லப் பிராணியாக மட்டும் அல்லாமல், தனது எஜமானரின் உணர்வுக்கு ஏற்ப தனது முகபாவத்தை மாற்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது சார்லி .அப்படி நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அதைப் பழக்கிய பயிற்சியாளரை நிச்சயம் பாராட்டலாம்.

செயற்கைத் தனமான அதிரடிகள் காட்டாமல் இயல்பாக நடித்துள்ளார் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி.

கதாநாயகியாக நடித்திருக்கும் சங்கீதா ஷ்ரிங்கேரி, குறைவாக வருகிறார்.கொடுத்த வேலையைச் செய்து விட்டு சென்றுள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சில காட்சிகளில் வந்து கவனம் பெறுகிறார்.

ஒரு நாயின் உணர்வுகளை ரசிகர்களிடம் மிகக் கச்சிதமாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளார்

கதை நகர்வுக்கு இடையூறு இல்லாத இசையை நோபின்பால் வழங்கியுள்ளார்.பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஆதார உணர்ச்சி அன்புதான் என்பதை அழகாக சின்னச் சின்ன வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளார் வசனம் எழுதிய ராஜ் பி.ஷெட்டி மற்றும் அபிஜித் மகேஷ்.

இப்படி ஒரு படத்தை முதல் படமாக இயக்கியிருக்கும் கிரண்ராஜ்.கே-வின் துணிவுக்கு சபாஷ்.இயக்குநராக அவரது செய்தொழில் நேர்த்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில், ‘777 சார்லி’ திரையில் புது ஆச்சரியம் !