‘மீசைய முறுக்கு 2 ‘திரைப்பட விமர்சனம்

ஹிப்ஹாப் தமிழா,சைத்ரா ஜே ஆச்சார்,கேதிகா ஷர்மா,ரம்யா ரங்கநாதன்,ஹர்ஷத் கான்,கருணாஸ்,நாசர்,ஆடுகளம் நரேன்,கருணாகரன்,பகவதி பெருமாள்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்,ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்,கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்.

அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் வாழும் ஹிப்ஹாப் தமிழா ஆதி கானா இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர் . அந்த இசை ஈடுபாட்டில் அவருக்குக் குடும்பப் பாரம்பரியமே உண்டு. அவரது தந்தை, தாத்தா அனைவருக்கும் கானா ஆர்வம் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஆதி பெரிய அளவில் தனக்கான இசை உலகத்தில் வளர்ந்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற இசைக் கலைஞராக ஆசைப்படுகிறார். ஆனால் வாய்ப்பு தேடி அலையும் போது அதற்கு மேட்டிமைக்குணம் கொண்ட நிறுவனக் கதவுகள் திறக்காமல் சாத்தப்படுகின்றன.அவரை அவமானப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் வளர்ந்து தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா என்பதுதான் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் கதை செல்லும் பாதை.

படத்தின் கதை எழுதி இசையமைத்து இயக்கியிருக்கும் ஆதியே கதையின் பிரதான நாயகனாக வருகிறார் .இந்த மூன்று தலைமுறைக் கதைகளிலும் பல்வேறு முகம் காட்டித் தோன்றி நடித்துள்ளார் ஓர்ஆர்வமுள்ள, இலட்சியக் கனவைச் சுமந்த இசைக் கலைஞராக அந்தப் பாத்திரத்தை அவர் சரியாகச் செய்திருக்கிறார்.

ஆதி ஒரு கனவு சுமந்த வாலிபனாகவும் தந்தையைப் புரிந்து கொள்ள மறுக்கும், பிறகு புரிந்துகொண்டவராகவும், காதலியிடம் சரண் அடைந்து, தலைமுறை இடைவெளிகளை புரிந்தவராகவும்  கதையை வெளிப்படுத்தி  சண்டைக் காட்சிகளில் நடித்து என தான் நடித்த  அந்தப் பாத்திரத்தில் அவர் கொடி கட்டிப் பறந்து இருக்கிறார்.

அவர் தந்தையாக பாபா பாஸ்கர் பொருத்தமான உணர்ச்சிகரமான பாத்திரத்தில் காட்டி நடித்திருக்கிறார் .தாத்தாவாக கருணாஸ் வந்து கவனம் பெறுகிறார் .முதல் தலைமுறையில் கதாநாயகியாக கன்னடக்கிளி சைத்ரா ஜே ஆச்சார், இரண்டாம்  தலைமுறையில் வரும் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன்,மூன்றாம் தலைமுறையில் வரும் கதாநாயகியாக கேதிகா ஷர்மா எனப் படத்தில் நடித்துள்ள நடிகைகள் மூன்று பேரும் தங்கள் தங்கள் தோற்றத்திலும் நடிப்பிலும் குறை இல்லாத படி இயக்குநர் கொடுத்த வேலையைச் செய்து இருக்கிறார்கள்.அந்த வகையில் முகம் காட்டித் தங்கள் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.குறிப்பாக ரம்யா ரங்கநாதன் நடிப்பில் மேலோங்கித் தெரிகிறார்.மேலும் நாசர்,ஆடுகளம் நரேன்,கருணாகரன் ,பகவதி பெருமாள் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவரவர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.ஓர் சுதந்திர இசைக் கலைஞனின் கனவுப் பயணம் சார்ந்த இந்தக் கதையில் இசையுலகில் நிலவும் அரசியல்,மேல் கீழ்ச் சமூகப்பாகுபாடு, தந்தை மகன் உறவு, அவர்களுக்குள் உள்ள தலைமுறை இடைவெளி, தந்தைக்கு மகன் செய்வது, மகனுக்குத் தந்தை செய்வது போன்ற முரண்கள், தீர்வுகள் அனைத்தையும் சார்ந்து காட்சிகளாக்கி இருக்கிறார்கள்.அது தொடர்பான முன் கதைகளில் போன தலைமுறைக் கதைகள் விரிகின்றன. அது சார்ந்த வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.நகைச்சுவையாக அவர் நினைத்து செய்திருக்கும் சில எடை குறைந்த நகைச்சுவைக் காட்சிகள் நகைச்சுவை சுலபமல்ல என்று தோன்ற வைக்கின்றன.

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஆதி முன்னணியில் மேலோங்கித் தெரிகிறார். அடுத்ததாக நடிகர் ஆதி இரண்டாம் இடத்தில் வருகிறார். இவர்களை வெளிப்படுத்திய இயக்குநராக அவர் வெற்றி பெற்றுள்ளார்.ஒரு கலகலப்பான பொழுது போக்குப் படத்தைக் கொடுத்த வகையில் அவர் இயக்குநராகத் தொடர்ந்திருக்கிறார்.

செயற்கைத்தனம் இல்லாத காட்சிகள் படத்திற்குப் பலமாக இருக்கின்றன.அதேவேளை இயல்பு என்கிற வகையில் ஈர்க்க முடியாத காட்சிகளும் உண்டு. இது ஒரு பலவீனமாக இருக்கிறது. மொத்தத்தில் ‘மீசைய முறுக்கு 2 ‘திரைப்படம் நல்ல ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாகி இருக்கிறது.