அன்பில் அவன்’ திரைப்பட விமர்சனம்

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், ரேவதி, சாபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.

படத்தின் கதை என்ன என்றால், சூரியா -கயல் இருவரும் காதல் திருமணமான புதுமணத் தம்பதியினர் .ஏழாண்டு கால காதலுக்குப்பின் ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்கக் கனவோடு இருக்கிறார்கள். அப்படியே தொடங்குகிறார்கள்.மலைவாழ் பகுதியில் தங்கள் கனவு இல்லத்தை வாங்கி அதில் குடி போக நினைக்கிறார்கள்.அரசியல் ரவுடிகளாலும் பொறுக்கிகளாலும் பல போராட்டங்களைச் சந்திக்கிறார்கள்.அவர்களின் பகை விஸ்வரூபம் எடுத்து முற்றுகிறது.அது அவர்களுக்கு உயிர் வாழும் போராட்டமாக மாறுகிறது.வாழ்வா சாவா போராட்டத்தில் சிக்கிய அவர்கள் மீண்டு மேலே வருகிறார்களா இல்லையா என்பதுதான் ‘அன்பில் அவன்’ படத்தின் கதை.

சூர்யா -கயல் என்று பெயர் கொண்ட அசோக் செல்வனும் பிரீத்தி முகுந்தனும் ஏழாண்டுகள் காதலித்த பின் புதிய பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு மலைவாழிடத்தில் ஒரு கனவு இல்லம் போல ஒரு வீட்டைக் கட்டி அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுச் சம்பாதிப்பது என்று ஆசைப்படுகிறார்கள்.அதற்கு ஒரு இடத்தில் பழைய வீட்டையும் வாங்குகிறார்கள் புதுப்பிக்கிறார்கள். அப்போது
உள்ளூர் அரசியல்வாதிகள் உள்ளூர் போலீஸ்காரர்கள் வக்கீல் போன்றவர்களுடன் தொல்லை ஏற்படுகிறது.அந்த அரசியல் ரவுடிகளாலும் பொறுக்கிகளாலும் பல போராட்டங்களைச் சந்திக்கிறார்கள்.அப்பகை பெரிதாகி வளர்ந்து அவர்களுக்கு உயிருக்கே அச்சுறுத்தலாக மாறுகிறது அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதிக் கதை.

அசோக்செல்வன் படத்தில் சூர்யா பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இழைய இழைய பிரீத்தி முகுந்தனைக் காதலித்து அவர் மீது உயிரையே வைத்திருக்கிறார்.அதற்காக எதையும் செய்பவராக இருக்கிறார். அப்படி பிரீத்தி ஆரம்பித்த வீட்டுக் கனவு தான் இப்படி வந்து நிற்கிறது.எவ்வளவு தொல்லைகள் வந்தாலும் காதலிக்காக எந்த எல்லை வரையும் செல்பவராக இருக்கும் அசோக் செல்வன் காதல் காட்சிகளிலும் மட்டுமல்ல ஆக்சன் காட்சிகளிலும் பின்னி இருக்கிறார்.அனைத்திற்கும் பின்னே அவரது அன்பும் காதலும் நிறைந்திருக்கிறது.
அதேபோல கயல் பாத்திரத்தில் வரும் பிரீத்தி முகுந்தன் சூர்யாவை அதாவது அசோக்செல்வனை க் காதலிப்பது மட்டுமில்லாமல் அவர் மீது வைத்துள்ள முரட்டு அன்பால் வாக்குவாதமும் சண்டைகளும் ஏற்படுகின்றன .அந்தப் பாத்திரத்தில் அவர் இயல்பாக நடித்துள்ளார்.நடிப்பின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பு உள்ள அந்தப் பாத்திரத்தில் சரியாகவே அவர் செய்துள்ளார்.தென்றலாகவும் புயலாகவும் மாறி வருகிறார்.
இப்படத்தில் எதிர்மறைப் பாத்திரங்களில் நடித்துள்ள கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத் மூவரும் அவரவர் ஏரியாக்களில் கலக்கி பார்ப்பவர்களிடம் வயிற்று எரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் ரேவதி வருகிறார்.

மலைப்பகுதி சார்ந்த இயற்கை வளப் பின்புலங்கள் பார்ப்பதற்கு நன்றாக உள்ளன. அதை அழகுணர்ச்சியோடு படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

இளமை துள்ளும் உணர்ச்சிமிக்க இந்தக் காதல் கதைக்கு ஏற்ற பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கி உள்ளார் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா.குறிப்பாக பின்னணி இசை சூழலின் தீவிரத்தை உயர்த்திக் காட்டுகிறது.

இப்படம்உண்மையான அன்பை நோக்கி தேடும் பயணமாக இருக்கிறது.அசோக் செல்வனும் பிரீத்தி முகுந்தனும் ஆதர்ச தம்பதிகளுக்கு  உதாரணமாக இருக்கிறார்கள்.-

தம்பதிகளில் யாராவது ஒருவர் மன்னிக்க முடியாத தவறு செய்திருந்தால் மறந்துவிடலாம் .மறக்க முடியாத தவறு செய்திருந்தால் மன்னித்து விடலாம் போன்ற பளிச் வசனங்களும் உண்டு.–

படத்தில் இரண்டாவது பாதியில் வரும் சண்டைக்காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம். மொத்தத்தில் முரட்டு அன்பைப் பேசுகிற இந்தப் படம் காதலர்களுக்கும் தம்பதிகளுக்கும் பிடிக்கும்.

–