‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றத்தைப் படக் குழு அறிவித்துள்ளது.இது பற்றிப் படக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
‘ எங்கள் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோகக் கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் இப்படம் பார்வையாளர்களைச் சிறந்த முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.
‘அன்பில் அவன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் மிகுந்த விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரம்மாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் இந்தக் கால அவகாசம் அவசியமானதாகத் தோன்றியது.
இந்தப் பயணத்திற்காக நாங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் தொடர்ந்த அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். வருகிற காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களைச் சந்திப்போம் என உறுதியளிக்கிறோம். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி!’
இவ்வாறு ‘அன்பில் அவன்’ படக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.


