சந்தீப் கிஷன் , ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் ,சம்பத்ராஜ் , ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேப்பி , ஷீலா ராஜ் குமார், மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன் , கிரண் கொண்டா, நாகசாய் நடித்துள்ளனர்.ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியிருக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். பிரவீன் கே எல் படத் தொகுப்பு செய்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ .சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
நாயகன் சந்தீப் கிஷன் யூடியூப் சேனல் நடத்துகிறார். அவருக்கு ஒரு காதலி உண்டு. அவர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விடுகிறார். அதனால் கடனில் தவிக்கிறார். எதையாவது பற்றிக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்று தவிக்கிறார். அந்த அளவிற்கு நிதி நெருக்கடியில் திணறிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சூதாட்டக் கும்பலின் பல மர்மங்கள் அவருக்குத் தெரிகிறது. இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், போதை மருந்துக் கடத்தல் தாதாவாக இருக்கும் சம்பத்ராஜ் தாய்லாந்தில் பல கோடி ரூபாய் பணத்தை ஒரு கண்டெய்னரில் பதுக்கி வைக்கிறார் .இதைத் திறக்கும் சாவி சென்னையில் ஒரு சூதாட்டக் கும்பல் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அது பல்வேறு கைகளுக்கு மாறி மாறிச் செல்கிறது. அதைத் தேடி சம்பத் , ஷிவ் பண்டிட் என்று இன்னொரு கும்பல் அலைகிறது.ஒரு கட்டத்தில் பணப் பிரச்சினையில் இருக்கும் நாயகன் கையில் அது கிடைக்கிறது. அதைத் தேடி வரும் அவர்கள் நாயகனைத் துரத்துகிறார்கள். அதன் விளைவாக அவருக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் வருகின்றன? கடைசியில் அந்தக் கண்டெய்னர் பணம் என்ன ஆனது ? என்பதுதான் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தின் கதை.
பெரிய பணத்தை கைப்பற்றத் துடிக்கும் சில கும்பல்களின் ஆடுபுலி ஆட்டம் தான் இந்தப் படம் என்றும் கூறலாம். ஆனால் இதில் சில கிளைக் கதைகளையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.சந்தீப் கிருஷ்ணிடம் சூதாட்டத்தின் உண்மைகள் ஒரு பென்டிரைவ் மூலம் தெரிய வருகிறது. அதைப் பயன்படுத்தி சில விளையாட்டுகளை விளையாடுகிறார் அவர். அதனால் மிரண்டு போன எதிர் கோஷ்டி அவரைத் துரத்துகிறது . இப்படிக் கதை ஆக்க்ஷன் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது.
சந்தீப் கிஷன் அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறாரே தவிர இவ்வளவையும் சமாளிக்கக் கூடிய அளவிற்குப் போதுமான ஒரு ஹீரோயிசம் அவரிடம் இல்லாதது போல் தோன்றுகிறது. எனவே அவரது தாங்குதிறன் தாண்டி அவர் மீது பெரிய எடையைச் சுமத்தியது போல் தோன்றுகிறது.காதல் காட்சிகளில் மிதமான மதிப்பெண் பெறும் அவர், சண்டைக் காட்சிகள் மட்டும் அதிக மதிப்பெண் பெறுகிறார்.அதற்காக அவர் நன்கு உழைத்து இருப்பது தெரிகிறது.
ஆக்சன் கதைகள் கொண்ட படங்களில் கதாநாயகிகளின் இடம் என்பது கவலைக்குரியதாகவே இருக்கும். இதிலும் அப்படித்தான்.நாயகியாக நடித்திருக்கும் ஃபரியா அப்துல்லா தோற்றத்தில் அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்குக் கதையில் ஆழமுள்ள கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. கறிவேப்பிலை போல அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அன்புதாசன் நகைச்சுவைப் பாத்திரத்தில் சிரிப்பு மூட்டுவதற்கு முயன்று இருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் அது பலிக்கவில்லை.
சம்பத் ராஜ், ஷீவ் பண்டிட், யோக்ஜேப்பி என மூன்று வில்லன்கள் வருகிறார்கள். சம்பத் நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஷிவ் பண்டிட் தோற்றத்தில் இருக்கிற மிரட்டல் நடிப்பில் காணவில்லை. ஜேப்பி பாத்திரம் அதன் குணச்சித்திரத்தின் மூலம் கவனம் பெறுகிறது. நடன இயக்குநர் ராஜு சுந்தரம் கதாநாயகனின் நண்பராக ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப் பாத்திரம் ஈர்க்கும்படி இல்லை .பழைய முகம் போல அவர் படத்தில் தோன்றுகிறார். கதாநாயகனின் தாயாராக ஷீலாராஜ்குமார் வருகிறார். சில காட்சிகளில் வரும் அவரை நன்றாகப் பயன்படுத்திருக்கலாம்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள கிருஷ்ணன் வசந்த் பாஸ் மார்க் வாங்கியுள்ளார்.இந்தப் படத்தில் ஏகப்பட்ட தெரிந்த நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கான அஸ்திவாரம் சரியாகப் போடாததால் மனதில் ஆழமாகப் பதியாமல் கடந்து செல்கிறார்கள். ‘மெட்ராஸ்’ படப் புகழ் நாயகி கேத்தரின் தெரசா ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டுச்செல்கிறார்.
படம் தொடங்கியது முதல் கடைசி வரை சூது ,போதை, கிளப்கள், சாவி ,மர்மங்கள் கொண்ட பென்டிரைவ், கன்டெய்னர் பணம் என்று எதிர்மறை அம்சங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன.அந்த இருண்ட விஷயங்களை வைத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.படம் திரில்லராக மாறும் போது தோன்றுகிற பரபரப்பு செயற்கையாக உள்ளது. நிஜமான சுவாரசியம் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கலாம்.
அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய் எடுத்துக்கொண்ட கதைக்களம் வலுவானதுதான். அதைத் திரைக்கதையில் வெளிப்படுத்த தவறியுள்ளார்.திரைக்கதையில் திணறி இருந்தாலும் பட உருவாக்கத்தில் அவர் பளிச்சிடுகிறார் என்பதை மறுக்க முடியாது. பெரிய ஆக்சன் படமாக கொண்டு வர வேண்டும் என்று சண்டைக் காட்சிகளில் பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளார் இயக்குநர்.லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்கிற மிகப்பெரும் நிறுவனம், ஏகப்பட்ட நட்சத்திரங்கள் என்று பெரிய கேன்வாஸில் இந்தப் படத்தை வரைய முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.அவர் வரைந்த படம் நிறைவின்மை உணர்வை ஏற்படுத்துகிறது.இந்தக் கதை எங்கோ பார்த்ததை நினைவு படுத்தினாலும் அதனைப் புதிய கோணத்தில் தர முயன்று உள்ளார் அவர்.
இசையமைப்பாளர் தமனிடம் இன்னும் எதிர்பார்த்தோம்.முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் என்று இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அதை அவர் ஈடு செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். அடுத்தடுத்த படங்களில் திரையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொண்டு மேலே வருவார் என்று எதிர்பார்க்கலாம்.முயன்று தவறிக் கற்பது தானே வாழ்க்கை.


