எச் ராஜா,டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய் ,தர்ஷினி ரெட்டி ,தபிதா குணரத்னே,மோனிகா ப்ரீத்தி,பிரதீக்ஷா மனோ பிரசாந்த் ,சிதம்பரம் பிடிகே நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் டாக்டர் எஸ். ராஜா.ராம்நாடு வாசு பி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார்.
மருத்துவமனை மருத்துவத்துறை பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாகி இருக்கிறது.அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும் பலரது அலட்சியங்களால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தனியார் மருத்துவமனைகள் எப்படி வியாபாரமாக மாறி மக்கள் பணத்தைச் சுரண்டுகின்றன அதன் பின்னனில் உள்ள மருத்துவ மோசடிகள் என்னென்ன என்பதையும் இந்தப் படத்தில் அப்ட்டமாகப் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனையில் டீனாகப் பணியாற்றும் டாக்டர் சந்திர போஸ் அர்ப்பணிப்புள்ள ஒரு மருத்துவராகச் சேவை செய்து வருகிறார் .ஆனால் அங்கே பணியாற்றும் பிற டாக்டர்களும் ஊழியர்களும் அவருக்கு நேர் எதிர்த் திசையில் செல்கிறார்கள்.வேலையில் அலட்சியம் , லஞ்சம் ,தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை என்று மக்கள் விரோதமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் மக்கள் பாதிப்பு அடைகிறார்கள். அதைச் சரி செய்வதற்கு அவர் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அவருடைய மகன் விஜய் பெரிய தொழிலதிபரின் மகளைக் காதலிக்கிறார். அந்தத் தொழில் அதிபர் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமும் வைத்திருக்கிறார்.தனது வருங்கால மருமகனை வைத்து பல திட்டங்களைப் போடுகிறார். மருமகனாகப் போகிற விஜய் ,பிரேக் த ரூல்ஸ் இஸ் மை ரோல் என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் திட்டங்களைப் போட்டு மருந்துகளுக்குச் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி காசு பார்க்கிறார்.அதனால் பலரும் பாதிப்படைகிறார்கள்.சப்ளிமெண்ட் தயாரிப்பிலும் இறங்கி அது புகாருக்குள்ளாகிறது. அதனால் பலரும் பாதிப்படைகிறார்கள்.சில மரணங்கள் நிகழ்கின்றன.ஒரு கட்டத்தில் தனது தந்தையின் எதிர்த் திசையில் செல்கிறார் விஜய்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் மகன் செய்யும் அநியாயத்தை அறிந்த தந்தை என்ன செய்கிறார் அந்தக் குற்றங்கள் என்னென்ன ? என்பதைச் சொல்வதே 147.41 நிமிடங்கள் கொண்ட’செய் செய்யாதே ’படத்தின் கதை செல்லும் பாதை.
அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் மருத்துவம் தொழிலாக மலிந்து இன்று அதில் நடக்கும் முறைகேடுகளையும் அப்பட்டமாகச் சித்தரித்து இந்தப்படக் கதை உருவாகி இருக்கிறது.
இதில் டாக்டர் சந்திரபோஸ் ஆக இயக்குநர் டாக்டர் எஸ் ராஜா நடித்துள்ளார் தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் குறை செல்வதற்கு இடமில்லாத வகையில் அவர் தோன்றுகிறார். அந்த டாக்டர் பாத்திரம் அவருக்குச் சரியாகவே பொருந்துகிறது.
அவரது மனைவியாக வரும் தர்ஷினி ரெட்டி பணத்தாசை பிடித்த ஒரு பெண்மணியாக வருகிறார்.அவரது மகன் விஜய்யாக ,குரு விஜய் நடித்துள்ளார்.பணத்தின் மீது குறியாய் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்து மகனை நினைவூட்டுகிறார் .தங்கம் குழும நிறுவனங்களின் அதிபராக வரும் சிதம்பரமும் அந்தப் பாத்திரம் போலவே தோன்ற வைக்கிறார்.
படத்தின் முதலமைச்சராக எச். ராஜா நடித்துள்ளார். அவரது மனதில் உள்ள ஆசை என்பதால், இன்னும் வலுவாக அப்பாத்திரத்தை நம்ப வைக்கிறார். நல்லது செய்வதற்கும் போதை பொருள்களை அழிப்பதற்கும் பதவியே போனாலும் பரவாயில்லை என்று சொல்வது படத்தில் கதாபாத்திரம் சொல்வதாகத் தோன்றவில்லை. அவராகவே சொல்வதாகவே தோன்றுகிறது எனவே அந்த பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் கூடுகிறது.
மருத்துவ உலகில் இவ்வளவு மோசடிகளும் சுரண்டல்களும் இரக்கமற்ற வியாபார நோக்கமும் இருக்கிறதா என்று பார்க்கப் பார்க்க மிரட்சியாக இருக்கிறது.தானும் ஒரு டாக்டராக இருந்து கொண்டு இப்படித் தைரியமாக கூறியதற்காக இயக்குநரை நிச்சயமாகப் பாராட்டலாம்.
படத்தின் ஒளிப்பதிவு ராம்நாடு வாசு பல இடங்களில் அலைந்து ஓடி ஒளிப்பதிவு செய்துள்ளார் இவர்.படத்தின் உருவாக்கத்தில் சிக்கனம் பார்க்காமல் செலவிட்டு உள்ளது புரிகிறது. படத்தின் நடிகராக டாக்டர் எஸ் ராஜா மனதில் இடம் பிடித்த அளவிற்கு இயக்குநராக நிறைவளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும் .சில தொழில் நுட்பப் போதாமைகள் உள்ளன.பட உருவாக்கத்தில் இன்னும் நேர்த்தி காட்டிருந்தால் இந்த படம் அழுத்தமான விளாவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
இயக்குநர் பின்னணி இசை அமைக்க, பாடல்களை டேனியல் இசையமைத்துள்ளார்.தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் முதல் பாதி சலிப்பூட்டாமல் சென்றாலும் இரண்டாவது பாதி சற்று நீளமாகத் தோன்றுகிறது.சில காட்சிகளுக்கு எடிட்டர் ராஜா முகமது கத்தரி போட்டு இரண்டாவது பாதியில் மேலும் இறுக்கம் கூட்டியிருக்கலாம்.
எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்கிற இந்தப் படம் விழிப்புணர்வு நோக்கில் உருவாகி இருக்கிறது.மொத்தத்தில் மக்களிடம் இன்று சொல்லப்பட வேண்டிய பல உண்மைகளை விழிப்புணர்வுத் தகவல்களை பல காட்சிகளின் மூலம் தைரியமாகக் கூறியுள்ளார் இயக்குநர் எஸ் ராஜா.அந்தத் துணிச்சலைப் பாராட்டிக் கை தட்டலாம்.அந்த விழிப்புணர்வு கருத்துக்களுக்காகவே குறைகளைப் புறம் தள்ளிவிட்டுப் படத்தைப் பார்க்கலாம்.


