ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான்,கீதா கைலாசம், அப்பாஸ்,பிரார்த்தனா நாதன் ,அதிர்ச்சி மதன், மதுரை முத்துநடித்துள்ளனர். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார்.மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியான். இவர் பள்ளி ஆசிரியர். இவர் உருவக் கேலிக்கு ஆளாகிறார்.இவரது உருவத்தை வைத்து ‘குதிரை முட்டை’ என்று எல்லாரும் கிண்டல் செய்கிறார்கள்.அவரோடு நிற்காமல் அவரது மகன் ஜிவி பிரகாஷையும் இந்த கேலி தொடர்கிறது. அவரை குதிரை முட்டை மகன் என்று கேலி செய்கிறார்கள்.இந்தக் கேலியால் அவர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்.இந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என்று, ஜிவி பெங்களூரு செல்கிறார்.அங்கே சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அங்கே உள்ள ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறார்.பெண்ணின் அப்பாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியானும் பெங்களூரு வந்து சேர்கிறார். அங்கே பெண்ணின் அப்பாவிற்கு, ஜார்ஜ் மரியானின் பாமரத்தனமான நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. ஈகோ பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நின்று போகிறது.இந்நிலையை ஜிவி பிரகாஷ் எப்படி எதிர்கொண்டார் ? இந்தத் திருமணம் நடந்ததா ? என்று சொல்வதே ‘ஹேப்பி ராஜ்'(Happy Raj ) படத்தின் மீதிக்கதை.
அப்பா என்பவர் அன்பும் ஆதரவும் கொண்டவராக இருப்பவர். அவரை உருவக் கேலி செய்யக்கூடாது என்று இயக்குநர் சொல்ல வருகிறார். இந்தக்கருத்தைப் படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் சொல்கிறார். மற்றபடி படம் முழுவதும் நாயகிக்கு வரும் காதல், சில நகைச்சுவைக் காட்சிகள் என்று செல்கின்றன.
ஜி.வி.பிரகாஷ் தனது சுறுசுறு நடிப்பின் மூலம் பார்வையாளர்களைக் கவர்கிறார்.
கதாநாயகி ஸ்ரீ கௌரி பிரியாவிற்கு அதிக வேலைகள் இல்லை. காதலிப்பது நடனம் ஆடுவது என்று தனக்குக் கொடுத்த பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷின் தந்தையாக வரும் ஜார்ஜ் மரியான் நகைச்சுவை நடிகராக இருந்தவர், இதில் குணச்சித்திரமாக வெளிப்பட்டுள்ளார். அவரது பாத்திரம் பார்ப்பவர்கள் மனதில் பதியும் .
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் மாடர்ன் டிரஸில் செய்யும் செய்யும் அலப்பறைகள் வேறு ரகம்.
நாயகியின் தந்தையாக மறுபிரவேசம் செய்துள்ளார் அப்பாஸ். அப்பாஸ் நடிப்பு சிறப்பு.
மதுரை முத்து அவர் பங்குக்கு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் வணிகப் படத்திற்கான இசைப் பங்களிப்பைச் செய்துள்ளார்.
தந்தை மகன் இடையிலான நட்பு உறவு புரிதல் பற்றி எளிமையான கதையை எடுத்துக் கொண்டு நகைச்சுவை முலாம் பூசி இந்தப் படத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன்.அவ்வகையில் தந்தை மீது மதிப்பு குறைத்து நடக்கும் இந்தக் கால பிள்ளைகளுக்கும் பாடம் எடுத்துள்ளார்.
மொத்தத்தில் ஹேப்பிராஜ் திரைப்படம் பார்ப்பவர்களை மகிழ்விக்கும்.


