‘ஹைக்கூ’ திரைப்பட விமர்சனம்

ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன், ஸ்ரீதேவி எஸ் கே ,அதிர்ச்சி அருண், அதியமான் ஏ ,சுப்பிரமணியன் சேது நடித்துள்ளனர் .யுவராஜ் சின்னச்சாமி இயக்கி உள்ளார் .சித்து குமார் இசையமைத்துள்ளார் . பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.சக்தி ப்ரனேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டி. அருளானந்து மற்றும் மத்தேயு அருளானந்து தயாரித்துள்ளார்கள்.

தந்தையை சலூன் கடை வைத்திருக்கும் ஓர் எளிய குடும்பத்தில் இருந்து கல்லூரி செல்லும் ஏகன் நண்பர்களின் தூண்டுதலால் வேடிக்கையாக ஒரு குறும்பு செய்ய அந்தக் கல்லூரியில் இருந்து அவர் வெளியேற்றப்படுகிறார்.இடையிலேயே கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வேறு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்காமல் இறுதியில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கிறது.அதுவரை பெண்கள் கல்லூரியாக இருந்த அது அப்போதுதான் ஆண்கள் பெண்கள் கல்லூரி ஆக மாற்றப்பட்டுள்ளது.முதல் ஆண் மாணவராக அவரைச் சேர்த்திருக்கிறார்கள்.அங்கே போன பிறகு தான் இது அவருக்குத் தெரிகிறது. சுற்றிலும் பெண்கள் கூட்டமாக இருக்க தன்னந்தனியான ஆண் மாணவனாக அவர் சங்கடங்களை எதிர்கொள்கிறார்.வெட்கம் கூச்சம் தயக்கம் என்று இருக்கும் அவர் ஆரம்பத்தில் செய்வது அறியாமல் தவித்தாலும் பிறகு போகப்போக அதில் பழகிக் கொள்கிறார். அப்போது சில பெண் நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் ஒரு நண்பர் தான் கொடி என்கிற ஸ்ரீதேவி அப்பாலா. இருவருக்குள்ளும் ஒரு புரிதல் வர காதலிக்கிறார்கள். காதல் வளர்ந்து கனிகிறது. ஆனால் ஏகன் காதலி மீது பைத்தியமாக இருக்கிறார். இது ஒரு மனநோய்க் கூறு என்று காதலி அச்சம் கொள்கிறார். திருமணத்தை நெருங்கும் போது இருவரும் பிரிகிறார்கள். பேசி சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று ஏகன் நினைக்கிறார்.ஆனால் பிரச்சினை அந்தக் கட்டத்தைத் தாண்டி விடுகிறது. திருமணம் நிச்சயமாகி விடுகிறது .காதலியின் திருமணத்துக்குச் சென்று ஏதாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று சென்ற ஏகன், ஆழ்ந்த மௌனத்தோடும் கனத்த இதயத்தோடும் அங்கிருந்து திரும்புகிறார் . இத்துடன் இடைவேளை வருகிறது.

எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு மென்பொருள் துறையில் பொறுப்பான வேலை பார்க்கிறார் ஏகன்.இவருக்குக் கீழே பலரும் பணிபுரிகிறார்கள். கண்டிப்பான பொறுப்பான நிர்வாகியாக இருக்கிறார். இன்டர்ன்ஷிப் எனப்படும் தற்காலிக பயிற்சிக்கான பழகுநராக ஃபெமினா ஜேம்ஸ் அங்கே வந்து சேர்கிறார்.அவர் ஒருவரைக் காதலிக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் பிணக்கு வந்து பிரிந்து விடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் காதலியை இழந்தவ ஏகனும் காதலனை இழந்த ஃபெமினாவும் இணக்கமாகிறார்கள்.ஒரு புரிதலுக்குப் பின் இரு இதயங்களும் இணைகின்றன.ஆனாலும் அங்கே ஒரு பிரச்சினை முளைக்கிறது.பழைய காதலியை நினைவில் வைத்துக் கொண்டு சிலவற்றை ஏகன் செய்யும்போது தனக்குரிய இடம் அளிக்காமல் பழைய காதலியின் இடத்தில் ’பதிலி’யாக்கி தன்னை நிரப்பிஅதில் இன்பம் காண்கிறாரோ என்று சந்தேகமும் குழப்பமும் வருகிறது.அதன் பின் இருவரும் பிரிய நேரிடுகிறது. இப்படிச் செல்லும் கதையின் முடிவு என்ன என்பதுதான் 143.23 நிமிடங்கள் கொண்ட ‘ஹைக்கூ’ படத்தின் மீதிக் கதை.

இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஏகன் இந்தப் படத்தில் மனோவாக  நடித்துள்ளார். தான் ஒரு சலூன் கடைக்காரர் மகன் என்கிற தாழ்வுணர்ச்சியை உள்ளத்தில் தேக்கிக் கொண்டு பொருளாதார மட்டத்தில் அடுத்த கட்டத்தை எட்டிப் பிடித்திட நினைக்கும் வர்க்கத்து வாலிபனாக அந்தப் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.சமூகத்தில் இருந்து அடுத்த அடுக்கு செல்ல எட்டிப் பார்க்கும் அந்தத் தயக்கவுணர்ச்சி கொண்ட வாலிபனின் பாத்திரத்தில் தோற்றத்திலும் நடிப்பிலும் உடல் மொழியிலும் அவர் சரியாகப் பொருந்தி வெளிப்பட்டுள்ளார்.இதைக் காரணம் காட்டித் தான் நெருங்கி பழகும் காதலி விலகினாரோ என்று நினைக்கும் போது அதை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் குறுகி மீள முடியாமல் வடிகால் தேடி மதுவில் மூழ்குவது புகையில் ஆழ்வது போன்ற காட்சிகளில் அவர் சமகால இளைஞர்களை நினைவூட்டுகிறார்.எந்த இடத்திலும் ஒரு நடிகராகத் தோன்றாமல் அந்தப் பாத்திரமாகவே தெரிகிறார். உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு ஓர் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏகனின் முதல் காதலி கொடியாக ஸ்ரீதேவி அப்பாலா நடித்திருக்கிறார். கொடி போன்ற உடல்வாகு வசீகரமான முகம் புன்னகை என்று அவர் தனது தோற்றத்தில் ஈர்க்கிறார்.குடும்பச் சூழலை மீற முடியாத ஒரு மகளாக அந்தக் கொடி பாத்திரத்தில் அவர் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளார். காதலன் போக்கும் குணமும் பிடிக்காமல் தடுமாறுவது மனம் மாறுவது என்று அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஏகனின் இரண்டாவது காதலியாக வரும் ஃபெமினா ஜார்ஜ் சாதாரண தோற்றத்தில் தோன்றினாலும் பல்வேறு விதமான நடிப்பு வாய்ப்புகளைக்கொண்ட அந்த நிவேதா பாத்திரத்தில் நடித்து அப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.போகப் போக அந்தப் பாத்திரம் அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறது.

இந்த மூன்று பிரதான பாத்திரங்களை தவிர படத்தில் பங்கு பெற்றிருக்கும் ஏகனின் தந்தை மைம் கோபி,நண்பன் அதிர்ச்சி அருண் ,  இந்துமதி மணிகண்டன், ஸ்ரீதேவி எஸ் கே , அதியமான் ஏ ,சுப்பிரமணியன் சேது போன்ற துணைக் கதாபாத்திரங்களில் வருகிற நடிகர்களும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கைப் பின்னணியில் இளமைத் துள்ளலோடு  ஒரு கவிதை போல் செல்கிற இந்த எளிமையான ஒரு காதல் கதையில் சாட்சிகளைக் கண்ணுக்கு உறுத்தாத வகையில் வண்ணங்களில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்  பிரியேஷ் குருசாமி.சித்து குமாரின் இசையில் ‘கருவிழி களவு நீ,கைப்பிடி நிலவு நீ,சிலநொடி கனவு நீ,முடிவிலி அழகு நீ,அகமொழி செலவு நீ,நறும்பிழி நினைவு நீ,
பனித்துளி சிறகு நீ,அதிரடி அசைவு நீ, என்றும் ‘விழிவாளை வீசிப்போறா/விழுந்தேனே தூக்கிப் போறா/ – ஓ/தடுமாற்றம் ஏற்றிப் போறா/
உடைந்தேனேநானும் நூறா’ என்றெல்லாம் வருகிற வரிகளில் இளமையை நுரைக்க விட்டுள்ளார் பாடலாசிரியர் மோகன் ராஜன்.

ஹைக்கூ என்று பெயர் ஏன் வைத்தார்கள்? ஹைக்கூ மூன்று வரிகளைக் கொண்டது. மூன்று பிரதான பாத்திரங்களைக் கொண்ட காதல் கதை என்பதாலா? காதல் ஒரு பூ மலர்வது போலவே மலரும். ஆனால் அதில் பிரச்சினையும் கணுவில் கிளைக்கும் சிறு கிளை போல தோன்றக்கூடும் . அந்தக் கிளை வளரும்போது களையாக மாறி திசைமாற்றி விடும் என்பதை அழகான இந்தக் கதை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.அவர் எனக்கே சொந்தம் வேறு யாருக்கும் அதில் இடமில்லை என்கிற காதலர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்வதையும் ஒருவரை ஒருவர் நம்பாத சந்தேகப்புகை சூழும் உள்ளுணர்வின் ஓட்டத்தையும் காட்சிகளாக்கி உள்ளார் இயக்கு நர்உண்மையான காதல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது; சந்தேகப்படாது ;ஆராய்ச்சி செய்யாது ;துரும்பு முரண்களை தூணாக  மாற்றாது என்பதை உணர்த்தும் காட்சிகள் மூலமும்  இருவர் உறவில் காதலை விட பெண்ணுக்கு சுயமரியாதை முக்கியம் என்பதை அழகான வசனங்கள் மூலமும் கூறியிருக்கிறார்கள்.அதற்கான காட்சிகளும் மனதில் அழுத்தமாக பதிகின்றன. மொத்தத்தில் உளவியல் ரீதியான இந்தக் கதையில் காதலர்களின் உணர்வுகளை மட்டுமல்ல மனதின் அசைவுகளையும் அழகாகக் காட்டி இருக்கிறார் இயக்குநர் .

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் உட்காரும் ரசிகர்களுக்கு இந்த ’ஹைக்கூ ’படம் ஆச்சரிய திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் எனலாம்.