‘டோரதி’ திரைப்பட விமர்சனம்

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ்,ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார் நடித்துள்ளனர்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார் .திரு என்கிற திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜோதி தேஷ் பாண்டே, குணீத் மங்கா கபூர் அச்சின் ஜெயின் தயாரித்துள்ளனர்.

ஒரு முன் குறிப்பு; இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கான படம் என்பதனை மறந்துவிட வேண்டாம். 

மதுரைப் பகுதியில் அந்தப் பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்து சேர்ந்த கார்த்தியை மற்ற மாணவர்கள் வெளியூர்க்காரன் என்று அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அப்போது நீ ஆண் பிள்ளை அழக்கூடாது வீரமாக இருக்க வேண்டும் என்று தேற்றி அவனுக்கு ஆதரவாகக் கை கொடுக்க வருகிறான் சுப்பு. அது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள்.இருவரும் இணைபிரியாது ஒத்த சிந்தனையில் வளர்கிறார்கள் .அடிதடியில் இறங்குகிறார்கள்.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறார்கள்.நாயகன், நண்பன் இருவரும் ரவுடிகளாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு நிலையில் சுப்புவின் உடலுக்குள்ளும் உள்ளத்துக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அது அவர்களது வீட்டுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற தகப்பனே சுப்புவைக் கொலை செய்யச் சொல்லி கார்த்தியிடம் கூறி மிரட்டுகிறார்.

ஒரு நாள் வெளியூரில் இருந்து கார்த்தி சுப்புவின் வீட்டுக்குப் போன் செய்கிறான், சுப்புவைக் கொன்று விட்டேன் என்று.அவர்கள் ஏன் சுப்புவைக் கொலை செய்யச் சொன்னார்கள். அதைக் கேட்டு விட்டு இவன் கொலை செய்தானா? இல்லையா? அதன் முன் கதை என்ன? என்பதைப் பற்றி 146.08  நிமிடங்களில் சொல்லும் படம் தான் ‘டோரதி.

பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் அடித்துக் கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது.அதற்குப் பிறகு மதுரைப் பக்கத்தில் உள்ள வன்முறை வரம்பு மீறல்கள் முரட்டுத்தனமான நடத்தைகள் போன்றவை காட்டப்படுகின்றன.சுப்புவுக்கு என்ன நேர்கிறது என்பது பிற்பாதிப் படத்தில் பெரும் பகுதி இடம் பெறுகிறது.நாயகனின் அப்பா ஆணாதிக்க மனம் கொண்டவர்.அம்மாவையும், தங்கையையும் ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு ஜாதி வெறி பிடித்தவர் .அது பார்ப்பவர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

இப்படத்தில் சுப்புவாக வரும் சனந்த் கதையின் பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் தனக்குள் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்தும் விதத்தில் நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். போகப்போக அவர் நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி விஸ்வரூபமெடுக்கிறார்..கார்த்தியாக வரும் ரிஷிகாந்த் நடிப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்து மிளிர்கிறார்.சிறிது நேரமே வந்தாலும் கீர்த்தி சுரேஷ் தனது பாத்திரத்தின் மூலம் அபிமானத்தையும் அனுதாபங்களையும் அள்ளிக் கொண்டு செல்கிறார். படத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், ராம்ஸ், முத்துக்குமார் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களின் மூலம் படம் பார்ப்பவர் மனதில் அடையாளம் பெறுகிறார்கள் .

எழுதி இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி இருக்கிறார்.அதற்கு எதிரான ஆண் திமிரை அடக்க வேண்டும் என்று கூறுகிறார். காட்சிகளில் மட்டுமல்ல பல இடங்களில் வசனங்களிலும் கார்த்திக் சுப்பராஜின் எழுத்தின் கூர்மை புரிகிறது. அதற்காக இவ்வளவு வன்முறைக் காட்சிகளும் பாலியல் காட்சிகளும் தேவையில்லை. முதல் பாதி படம் முழுக்க அப்படியே உள்ளன .அவற்றைக் கட்டுப்படுத்தி இருந்தால் எல்லோருக்குமான படமாக இது மாறியிருக்கும்.

ஒளிப்பதிவு செய்து இருக்கும் திரு பாத்திரங்களின் தீவிரத்தைத் திரையில் கொண்டு வந்து சேர்க்கிறார். அதுமட்டுமல்ல காட்சிகளுக்காக வரும் பின்புலங்களும் தீவிரத்தின் சாட்சியாகத் தோன்றும் வகையில் பயன்பட்டுள்ளன.அந்தப் பின்புல நிலக்காட்சிகள்
கதை மாந்தர்களின் உணர்வுகளை வலுப்படுத்தும் சாட்சியங்களாக அமையும்படி காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை உயர்த்திப் பிடித்துள்ளன.

மொத்தத்தில் இந்த ’டோரதி’ பாரதி போல் ஒரு புதிய கருத்தை முன்வைத்து இருக்கிறது .அதீத வன்முறையும் பாலியல் காட்சிகளையும் இணைத்துகொடுத்திருப்பதால் சற்றே வெகுஜன பார்வையாளர்களிடமிருந்து விலகி நிற்கிறது. அவற்றைத் தவிர்த்து இருந்தால் இந்தப் படம் எல்லோருக்குமான படமாக மாறி இருக்கும்.