
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.
“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.”
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் தோன்றியிருப்பதும், மர்மம் நிறைந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம், நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


