‘காபி வித் காதல்’ விமர்சனம்

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு ,மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா,
திவ்யதர்ஷினி டிடி, சம்யுக்தா ஷண்முகம், விச்சு விஸ்வநாத் அருணா பால்ராஜ், பேபி விர்த்தி நடித்துள்ளார்கள்.

சுந்தர் சி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தை அவ்வினி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர் சி தயாரித்துள்ளார் .பென்ஸ் மீடியா ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி .

ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பார்கள். பல திருப்பங்களுடன் கூடிய நாடகத்தனமான ஒரு கதை இருக்கும் .கவர்ச்சிகளுக்கும் நகைச்சுவைக்கும் கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது .மொத்தத்தில் கலர்ஃபுல்லாகப் படம் தெரியும்.ஜாலி தான் முக்கியம் லாஜிக் அப்புறம். இதுதான் சுந்தர் சி யின் பாணி.இந்த பாணியில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘காபி வித் காதல்’ .

இதில் ஒரு வித்தியாசம் எளிமையான கதைக்குப் பதிலாக சில சிக்கல்கள் கொண்ட கதையாக எடுத்து இருக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், திவ்யதர்ஷினி (டிடி) இந்த நால்வரும் பிரதாப்பின் பிள்ளைகள்.

ஸ்ரீகாந்துக்கும் ஷம்யுக் தாவுக்கும் திருமணம் ஆகி இருக்கிறது.திவ்யதர்ஷினிக்குத் திருமணம் ஆகி பிரசவத்திற்காக தந்தை வீடு வந்துள்ளார்.ஜீவா, ஜெய் இருவருக்கும் திருமணமாக வேண்டி உள்ளது.ஆனால் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வெவ்வேறு வெளி உலக தொடர்புகள் உண்டு.சில காதலுடன். சில காதல் அல்லாமல்.இப்படிப்பட்ட நிலையில் ஜெய்யிக்கும் ஜீவாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.
பெண் பார்க்கும் படலத்தில் நடக்கும் கலகலப்புகள் முந்தைய பிளாஷ்பேக் அறிந்து வெடிக்கும் பூகம்பங்கள் யார் யாரை காதலிக்கிறார்கள் என்கிற குழப்பங்கள் என அனைத்தையும் கலந்து கட்டி ஒரு கலகலப்பான படமாக உருவாக்கி உள்ளார் சுந்தர் சி.

ஸ்ரீகாந்த் ,ஜீவா, ஜெய் என மூவரும் அவர்களுக்கான ஏரியாக்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.திவ்யதர்ஷினியோ வீட்டோடு இருந்து கொண்டே கலகலப்பூட்டுகிறார்.

அமிர்தா,மாளவிகா சர்மா,
ஐஸ்வர்யா தத்தா, ரைசாவில்சன் என்று அழகான வில்லத்தனமான கதாநாயகிகள்.அவரவர் பங்கைச் சிறப்பாக செய்துள்ளனர். கூடுதலாக அனைவருமே கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளனர்.

திருமண ஏற்பாட்டாளர்களாக அதாவது வெட்டிங் பிளானராக வரும் யோகி பாபு கிங்ஸ்லி கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறது. குறிப்பாக யோகி பாபு போடும் பல்வேறு வேடங்கள் நல்ல சிரிப்பை வர வைக்கின்றன.

கவர்ச்சிகரமான கதாநாயகிகள், துறுதுறுப்பான கதாநாயகர்கள், வண்ணமயமான பின்புலங்கள், சின்ன சின்ன நகாசு வசனங்கள், ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவைகள், யுவனின் கமர்சியல் ஆன இசை என்று ஒரு முழு நீள நகைச்சுவைத் தோரணமாக இந்தக் காதல் கதையை உருவாக்கி உள்ளார். காதல் என்கிற பெயரில் அடிக்கும் லூட்டிகள் சரியான நகைச்சுவை.முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாவது பாதியில் குறைந்தாலும், சந்தேகம் இல்லாமல் இது ஒரு முழு நீள வணிக மசாலாப்படம் சுந்தர் சி முத்திரையுடன்.ஜாலிப் பிரியர்கள் பார்க்கலாம்.