‘லவ்டுடே ‘விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் ,ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர்.

ஒரு காலத்தில் டிவி வந்தபோது அதை இடியட் பாக்ஸ் என்றார்கள்.பெட்டிச்சாத்தான் என்றார்கள். அறிவியல் வளர்ச்சியில் அடுத்து வந்திருக்கிற செல்போனைக் கையில் உள்ள குட்டிச்சாத்தான் என்கிறார்கள்.

அப்படி ஒரு மொபைல் போனுக்குப் பின்னே உள்ள சுவாரஸ்யங்களையும் பயங்கரங்களையும் வைத்து ஒரு காதல் கதையாக உருவாகியுள்ளது தான் லவ் டுடே.

பளிச்சென்று தெரிகிற கதை தான்.பிரதீப்பும் இவானவும் காதலிக்கிறார்கள்.பிரதீப் சாதாரண குடும்பத்துப் பையன், இவானா பிராமணப் பெண்.

இவானாவின் தந்தை சத்யராஜ் மிகவும் கண்டிப்பானவர். ஆச்சார அன்பர்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ரகம்.
இவர்களது காதலுக்கு குறுக்கே புகுந்து அவர் பெரிய ஆர்ப்பாட்டம் வில்லத்தனம் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரே ஒரு சிறிய நிபந்தனை விதிக்கிறார்.

இருவரும் செல்போனை ஒரு வாரம் மாற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதே மனநிலை தொடர்ந்தால் திருமணம் நிச்சயம் என்கிறார்.

அப்படியே மாற்றிக் கொள்கிறார்கள். அதன் பின்னே குட்டிச்சாத்தான் ஆன செல்போன் மூலம் நிகழும் நகைச்சுவைகள், சுவாரஸ்யங்கள், பயங்கரங்கள், வக்கிரங்கள் அனைத்தும் பீறிட்டுக் கிளம்பி கதையை நகர்த்துகின்றன. கலகலப்பு விறுவிறுப்பும் கூட்டி கதை ஓட்டம் எடுக்கிறது.

ஒவ்வொருவர் செல்போனில் இருந்தும் ஒவ்வொரு விதமாக கிளம்புகிறது பிரச்சனை பூதங்கள். காதலர்கள் இருவருக்கும் சந்தேகம், கோபம், வெறுப்பு என்று பெருகி விரிசல் விழுகிறது.
முடிவு என்ன என்பதுதான் கதை.

இதில் பிரதீப் ரங்கநாதன் அதாவது இயக்குநர் தனுஷை நினைவூட்டும் படி அதே பாணியில் நடித்துள்ளார். சின்ன சின்ன காட்சிகள் மூலம் சுவாரஸ்ய தோரணம் கட்டி ரசிகர்களைக் கலகலப்பூட்டுகிறார்.சாதாரண தோற்றத்தில் இருந்தாலும் நடிப்பிலும் குறை இல்லை. புத்திசாலித்தனமான காட்சிகளால் இயக்குநராகவும் பதிகிறார்.

கதாநாயகி நிகித்தா பாத்திரத்தில் நடித்திருக்கும் இவானாவும் நடிப்பில் சளைத்தவர் அல்ல .உருகி காதலிப்பதாகட்டும் | சந்தேக பார்வையில் தீயாய் எரிப்பதாகட்டும், புழுங்கிக் குமுறுவது ஆகட்டும் எல்லா நடிப்பு வகைமையிலும் முத்திரை பதிக்கிறார்.

கதாநாயகனின் அப்பாவாக வரும் சத்யராஜ் அதிகம் பேசாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உரத்துப் பேசாமல் விழியாலேயே வில்லத்தனம் காட்டி உடல் மொழியாலேயே உன்னத நடிப்பை வழங்கி உள்ளார்.

பிரதீப் அம்மாவாக வரும் ராதிகாவும் அழுத்தமான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தில் பிரதீப் பின் அக்காவை திருமணம் செய்து கொள்ளப் போகும் யோகி பாபு கெட்டவரைப் போல் சந்தேகம் கொள்ள வைக்கும் பாத்திரத்தில் வருகிறார். ஆனால் அவர் நல்லவராக இருந்து மனங்களைக் கொள்ளை கொள்கிறார்.

இந்த தலைமுறை இளைஞர்களின் அந்தரங்க உலகம் எப்படி இருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி ஒரு பக்கம் கலகலப்பூட்டினாலும் பெற்றோருக்கு அதிர்ச்சியையும் அளிக்கிறது இந்தக் கதை.

ஆனால் இந்தப் படத்தை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். அதே நேரம் பெற்றோரும் பார்த்து அவர்களது பிள்ளைகளின் இன்றைய சூழலில் உள்ள மன உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆயிரம் பேர் சொன்னாலும் ஆயிரம் சந்தேகங்கள் வந்திருந்தாலும் ஒருவரை ஒருவரை நம்புவது தான் வாழ்க்கை என்று பிரதீப்புக்கு ராதிகா சொல்லும் நம்பிக்கை மொழியோடு முறிந்த காதல் ஒட்டிக் கொள்கிறது.

முதல் லவ் டுடே படத்தில் காதலர்கள் பிரிந்து காவிய அந்தஸ்து கிடைத்த உணர்வு, இதில் மிஸ்ஸிங்.காதலர்கள் மீண்டும் சேர்ந்து சாதாரண படமாகி விடுகிறது.

ஆனாலும் ஒரு கலகலப்பான புத்திசாலித்தனமாக காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இந்த லவ் டுடே அமைந்திருக்கிறது. இளைஞர்கள் கொண்டாடுவார்கள்.