சரத்குமார் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘டாக்ஸி’!

பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் டான், மஹா பெர்ஜெயா ஃப்ரோஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சப்ரினா சியாமலா பின்தி அப்துல்லா, புவான் ஸ்ரீ வோங் யோக் லியான் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், கிரீன் பேக்கெட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஷாஹுல் ஹமீத் பின் ஷேக் தாவூத் ஆகிய நால்வரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினர்.

இயக்குநர் மணி ரத்னமும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இயக்குநர் தனா, மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். பொதுவாக குறைவாக பேசும் இயல்புடைய இயக்குநர் மணி ரத்னம், தனாவின் முயற்சியை வெகுவாகப் பாராட்டியதுடன், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார், சிறப்பு விருந்தினர்களையும் விழாவுக்கு வருகை தந்திருந்த முக்கியப் பிரமுகர்களையும் வரவேற்றார்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்திருப்பதுடன், ஆக்‌ஷன் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நடிகர் சரத்குமாரின் 177 ஆவது திரைப்படமான ‘டாக்ஸி’ அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகிறது. வெவ்வேறு தலைமுறைகளைக் கடந்தும் ஆக்‌ஷன் ஹீரோவாகத் தனது செல்வாக்கையும் ரசிகர்களின் வரவேற்பையும் தக்கவைத்திருக்கும் அவரது பயணத்தில் ‘டாக்ஸி’ திரைப்படம் மற்றுமொரு முக்கியமான திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். ஐ.நவீன்குமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதுகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார். சங்கத் தமிழன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ஹர்ஷினி ரவிச்சந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், உத்ரா மீனாட்சி கொங்கரா நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படைப்பாற்றல், அனுபவம் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இரு நிறுவனங்கள் முதன்முறையாகத் திரைப்படத் தயாரிப்பில் கைகோத்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.