ஷாருக்கான் பிறந்தநாளில் வெளியான ‘கிங் ‘ திரைப்படத்தின் முதல் பாடல்!

தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் ‘கிங்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே’ எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் – அதிரடி – அவரது மிரட்டலான, திகிலூட்டும் பாணி ஆகியவை கலந்த இந்தப் பாடலில் தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்தப் பாடலில் அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன்  ஆகியோரின் உலகளாவிய இசைப் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இதைவிட ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் விரைவில் வெளியாகவுள்ள அதிரடித் திரைப்படமான ‘கிங் – KING’ படத்தின் முதல் பாடலான ‘தூ மில் ஜாயே’ பாடலை வெளியிட்டுள்ளார். இது இசை மற்றும் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. அர்ஜித் சிங்கின் அற்புதமான குரலும், எட் ஷீரனின் தனித்துவமான ராப் இசைப் பாணியும் இணைந்து, உலகளாவிய இசை விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும், ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வருகிறது.

‘கிங் – KING’ திரைப்படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலான இந்தப் பாடல், ஷாருக்கானின் வசனத்துடன் தொடங்குகிறது. ‘நான் கொலையாளி அல்ல, காதலன்; என் இலக்கு என் காதலி. இதயத்தைத் துளைக்காதவன் என்ன காதலன்?..’ என்ற இந்த வசனம் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை அதிரடியாக வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வரும் துள்ளலான காதல் நடனப் பாடல், பாலிவுட்டின் புகழ்பெற்ற அர்ஜித் சிங்கையும், உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் எட் ஷீரனையும் ஒன்றிணைக்கிறது. மதுபந்தி பாக்ஸியின் மந்திரக் குரலும் இதில் கூடுதலாக இணைந்து பாடலை மெருகேற்றுகிறது.

காதல் – அதிரடி மற்றும் மிரட்டலான உணர்வுகளை உள்ளடக்கிய இந்தப் பாடல், ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது.

இசையமைப்பாளர்கள் சச்சின் – ஜிகர்இசையமைப்பில், பாடலாசிரியர் குமார் பாடலை எழுத, நடன இயக்குநர்கள் பியூஷ் – ஷாஜியாவின் நடன அமைப்பில், எட் ஷீரனின் ஆங்கில மொழியிலான ராப் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ள ‘தூ மில் ஜாயே’ பல படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சங்கமமாகத் திகழ்கிறது. பாடலின் இறுதியில் ஷாருக்கானின் மற்றொரு அதிரடியான வசனமும் இடம் பெறுகிறது. ‘இந்த முறை இதயத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது; உலகத்தையே எரித்து விடாமல் நான் ஓயமாட்டேன்!’ எனும் இந்த உரையாடல், ‘கிங்’ திரைப்படத்தின் தீவிரமான மற்றும் கம்பீரமான சூழலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

திரையில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் கெமிஸ்ட்ரி எப்போதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அது இந்த ‘தூ மில் ஜாயே ‘ பாடலிலும் எதிரொலிக்கிறது. அழகான காதல் தருணங்கள் – பிரம்மாண்டமான காட்சிகள் மூலம் அந்த மந்திரத்தை மீண்டும் திரையில் உயிர்ப்பித்திருக்கிறது. இதில் உள்ள அதிரடிக் காட்சிகள் – நேர்த்தியான மாற்றங்கள் – உரையாடல்கள் ஆகியவை, இது ஒரு சாதாரண பாடல் வெளியீட்டை விடக் கூடுதலான அனுபவத்தை வழங்குகின்றன. ‘கிங்’ திரைப்படம் வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தவுள்ள உலகத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தையும் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட்  மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’, எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தூ மில் ஜாயே ‘ பாடல் தற்போது அனைத்து இசைத் தளங்களிலும் கிடைக்கிறது. இதன் வீடியோவை ஜீ மியூசிக் கம்பெனி மற்றும் டி-சீரிஸ் ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்களிலும் பார்வையிடலாம்.