‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்பட விமர்சனம்

ஆண்டனி வர்கீஸ்,இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன், பாலு வர்கீஸ், ஜமுனா அப்துல் ரகுமான்,நிஷாந்த் சாகர், ஷாஜு தாமோதரன் , டி. ஜி .ரவி , லுக்மான் அவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .நிகில் பிரேம் ராஜ் இயக்கியுள்ளார் .ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி எஸ் ஸ்டான்லி – ஃபைசல் லத்தீப் – ஷோனி ஸ்டீஜோ செபஸ்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் அசோக் தமிழில் வெளியிடுகிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் உருவாகி தமிழில் மொழி மாற்றுப்படமாக வந்துள்ளது. கதைப்படி தெற்கத்திச் சீமையில் ஆத்தங்கரை என்ற ஒரு கிராமம் ,அந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம். பெரியவர் முதல் சிறியவர் வரை கால்பந்து விளையாட்டுகளை டிவியில் பார்ப்பதை மகிழ்ச்சியாக உணர்பவர்கள். மெஸ்ஸிதான் அவர்களின் கடவுள்.தாங்களும் அப்படி விளையாடி மேலே செல்ல வேண்டும் என்பதை ஒரு கனவாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஊரில் 14 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவர் குழு கால்பந்தாட்டத்தில் மும்முரமாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கிறது.

அந்தச் சிறுவர்கள் கதாநாயகனுடன் இணைந்து மைதானம் ஒன்றைச் சுத்தம் செய்கிறார்கள்.பிறகு விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.உள்ளூர் அளவிலான போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது. அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் ,ஆர்வம் மட்டும் போதாது சரியான பயிற்சி வேண்டும் என்று உணர்கிறார்கள். அப்போது, ​​கால்பந்து ஜாம்பவான் ஐ. எம். விஜயனை அணுகிப் பயிற்சி அளிக்க வேண்டுகிறார்கள். இவர்களது ஆர்வத்தைப் பார்த்து அவரும் முன்வருகிறார்.அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்ட சிறுவர்கள், பெரிய போட்டிகளில் பங்கெடுக்கத் தயாராகிறார்கள் .அப்படிப்பட்ட போட்டிகளில் அவர்கள் வென்றார்களா என்பது தான் 125-19 நிமிடங்கள் கொண்ட  ’7ஸ்டார் பாய்ஸ்’ படத்தின் மீதிக் கதை.

விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்களின் ஈடுபாடு துடிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இது முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்திய கதையை உருவாக்கி எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுவர்களின் கனவுகளுக்குத் துணை புரி யும் பாத்திரங்களில் இளைஞர்களும் பெரியவர்களும் வருகிறார்கள். நட்சத்திரப் பயிற்சியாளராக வரும் ஐ வி விஜயனும் அதில் அடக்கம்.

இந்தப் படத்தில் துறுதுறுப்பான துடி துடிப்பான இளம் விளையாட்டு வீரர்களாக நடித்திருக்கும் அனைத்து சிறுவர்களும் அந்தக் கதாபாத்திரமாகவே தோன்றுகிறார்கள். போட்டிகள் நடைபெறும் போது அதை விறுவிறுப்பாக நடத்துவதிலும் தொகுப்பதிலும் என்று நம்மை அந்த மைதானத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்தக் கதையில் வரும் மரைக்காயர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையில் பெரிய முடிச்சு வரப்போகிறது என்று குறிப்பு உணர்த்தினாலும் அது வேறொரு காதல் கிளைக் கதையாக மாறி படத்தில் இடம் பெற்றுள்ளது.

விளையாட்டு தொடர்பான படமாக இருந்தாலும் சற்றும் சலிப்பும் தொய்வுமில்லாமல் இந்தப் படம் உருவாகி இருக்கிறது .அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவும் இசையும் நம்மைக் கண் சிமிட்ட விடாமல் கட்டுக்குள் வைத்து இந்தப் படத்தின் மீது நம் கவனத்தைக் குவிக்க வைத்துள்ளது சிறப்பு.சினிமாத் தனம் இல்லாமல் இயல்பான திரைக்கதை, ஒளிப்பதிவு, இனிய இசை, உரிய நடிப்புக் கலைஞர்கள் என்று இந்தப் படம் எவ்வகையிலும் புறந்தள்ள முடியாத ஒரு படமாக உருவாகி இருக்கிறது.

விளையாட்டின் குதூகலம், வேகம், துடிப்பு போன்றவற்றைக் காட்சிகளில் காண முடிகிறது.

மொத்தத்தில் இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படியான கண்ணியமான படமாக உருவாகி இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் படியான ஒரு  படமாக ‘7 ஸ்டார் பாய்ஸ்’ உருவாகி இருக்கிறது .