’ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம்

‘ஜெயிலர்’ படம் முதல் பாகம்  ,சிலை கடத்தல் கூட்டத்தை அழிப்பதோடு, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த தனது மகனை ரஜினிகாந்த் சுட்டுக் கொல்வதோடு முடியும். அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 உருவாகி உள்ளது.இதன் கதையில், சிலை கடத்தல் கும்பலின் முழு வலைப் பின்னல்களைக் கண்டுபிடித்து முற்றாக ஒழிப்பது தான் ரஜினியின் பயணத்திட்டம்.இந்தப் பாதையில் செல்வதே இரண்டாம் பாகம்.
அதே சமயம், வர்மாவைக் கொன்றது யார் ? என்பதைக் கண்டுபிடிப்பதில் எஸ்.ஜே.சூர்யா தீவிரமாக இருக்கிறார். அதற்கான பயணத்தை அவர் தொடங்குகிறார்.இப்படி எதிர் எதிர்த் திசையில் இருவரது தேடல்களும் மோதல்களும் எந்த முடிவை நோக்கிச் செல்கிறது என்பதுதான் மீதிக் கதை.இந்த கதை பரபரப்பு விறுவிறுப்பு அதிரடி ஆக்ஷன் ஆட்டங்கள் மட்டுமல்ல நகைச்சுவை காட்சிகளும் நிறைந்து உருவாகி உள்ளது. பொதுவாக தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகம் பெரிதாக வெற்றி பெறுவதில்லை இந்த விதியை உடைத்துள்ளது
‘ஜெயிலர் 2’.

பொதுவாக ரஜினி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவர் தான் எல்லாமே அது சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தாலும் எத்தனை கோடி செலவு செய்திருந்தாலும் ரஜினி என்கிற ஒற்றைச்சொல் தான் வியாபார மதிப்பையும் ரசிகர்கள் ஆதரவையும் பெற்றுத் தரும்.அதை மனதில் வைத்துத் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினி என்கிற நாயக பிம்பத்தின் முன் தர்க்கங்கள் கேள்விகள் எதற்கும் இடமில்லை. எனவே அப்படிப்பட்ட எவ்வளவோ நம்ப முடியாது தர்க்கமீறல் காட்சிகள் இருந்தாலும் ரஜினி என்ற ஒற்றைப் பிம்பம் அனைத்தையும் தகர்த்து விடுகிறது.

எனவே இந்தப் படத்தில் ரஜினியின் திரையிருப்பு ஆக்சன் காட்சிகளுக்கு மட்டும் அல்ல நகைச்சுவை காட்சிகளுக்கும் உத்தரவாதம் தருகிறது.எனவே முழுப் படத்தின் அனைத்து எடையும் அவர் தோள்களில் ஏற்றப்பட்டு சுமந்து இருக்கிறார்.அலட்டிக் கொல்லாமலே அந்த பாத்திரத்தை அனாயாசமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் ஆதரவை அள்ளுகிறார். நகைச்சுவைக் காட்சிகளில் துணைக் கதாபாத்திரங்களுக்கு இடம் அளித்து அமைதியாக இருந்தே அதை ரசிக்க வைக்கிறார். அதே சமயம் தனது வழக்கமான அசைவுகள் மூலம் ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.எதிர்மறைப் பாத்திரத்தில் வரும் சுராஜ் வெஞ்சரமூடு, தனது மிரட்டலான நடிப்பின் மூலம் திரைக்கதைக்குக் கூடுதல் பலம்சேர்த்துள்ளார் .சில காட்சிகளில் அவரை அறியாமலேயே அவர் சிரிக்கவும் வைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா தனது தோற்றம், உடல் மொழி, வசனம் ஆகியவற்றின் மூலம் மிரட்டலான வில்லன் பாத்திரத்தில் பதிகிறார்.

யோகி பாபு மற்றும் நமோ நாராயணன் கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள் நம்மை மறந்து சிரிக்க வைக்கும் படி உள்ளன. முதல் பாதிப் படத்தை கலகலப்பாக நகர்த்த அவை உதவியுள்ளன.

ரஜினியின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன், மருமகளாக வரும் மிர்னா, வித்யா பாலன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்குக் கொடுத்த பணியைச் சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தின் பிரம்மாண்டத்தைக் காட்சிகளாகக் கண்முன் நிறுத்துகிறார்.அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை மாஸ் படம் என்பதை நிரூபித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொய்வு இல்லாமல் தொகுத்திருக்கிறார் ஆர்.நிர்மல்.

ஒருவரியாகச் சொல்லும் போது சாதாரணமாகத் தோன்றும் ஒரு கதையை திரைக்கதை சுவாரஸ்யம் காட்சிகளில் பிரம்மாண்டம் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பு ஆக்சன் நகைச்சுவை காட்சிகளின் சேர்மானம் என்று ஒரு பெரிய வணிக ரீதியான வெற்றிப் படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

அகில இந்திய ரீதியில் புகழ்பெற்ற நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஜாக்கி ஷெராஃப், மிதுன் சக்கரவர்த்தி, மோகன்லால் ,சிவராஜ்குமார், விஜய் சேதுபதி  ஆகியோரை ஆங்காங்கே தோன்ற வைத்துப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திப் பலம் சேர்த்துள்ளார்.

மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ மேஜிக் பார்க்கத் தோன்றாத ரஜினி மேஜிக்!